சென்னை : சென்னை, பல்லாவரம், எண்-19, என்ற முகவரியில் வசித்து வரும் பிரகாஷ், வ/32, த/பெ.மூர்த்தி என்பவர் கடந்த 09.10.2011 அன்று மதியம் சுமார் 1.00 மணியளவில் சென்ட்ரல் சப்வே உட்புறம் நடந்து சென்று கொண்டிருந்த போது, வியாசர்பாடி பகுதியைச்சேர்ந்த குமார் (எ) அருப்பு குமார் மேற்படி பிரகாஷை வழிமறித்து கத்தியைக்காட்டி மிரட்டி அவரிடமிருந்து 1 ¼ சவரன் தங்கச்செயின் மற்றும் ரூ.1340/- பறித்துக்கொண்டு தப்பியுள்ளார்.
இது குறித்து பிரகாஷ் C-1 பூக்கடை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட குமார் (எ) அருப்பு குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக 18வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், C-1 பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் புரியும் காவலர் இருவரும் மேற்படி வழக்கு தொடர்பான சாட்சிகளை கடந்த 6 மாதங்களாக முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கு விசாரணை முடிந்து நேற்று 28.01.2020 தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றவாளியான குமார் (எ) அருப்புக்குமார், வ/32, த/பெ.ரவி, வியாசர்பாடி என்பவருக்கு 10 வருட சிறை தண்டனை மற்றும் ரூ. 5,500/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேற்படி வழக்கில் சிறப்பான புலனாய்வு செய்தும், துரிதமாக சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், குற்றவாளிக்கு 10 வருட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் பெற்றுத்தந்த C-1 பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் திரு.சித்தார்த்த சங்கர் ராய் மற்றும் இரண்டாம் நிலைக்காவலர் திரு.A.சுப்புராஜ் (கா.எண்.52034) ஆகிய இருவரையும் இன்று 29.01.2020 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை