திருச்சி : திருச்சி மருத்துவ கல்லூரி குடியிருப்பை சேர்ந்த சேதுலெட்சுமி என்பவர் குடும்பத்தில் ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாடு காரணமாக (31.01.23)-ந் தேதி காலை 06.30 மணி முதல் காணாமல் போனதாக அவரது மகன் பிரபாகரன் என்பவர் (31.01.23)-ந்தேதி கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது. மேற்படி மூதாட்டி காணாமல் போனபோது பணமோ, நகையோ, கைப்பேசியோ எடுத்து செல்லவில்லை. இந்நிலையில் காணாமல் போன மூதாட்டியின் மகன் 03.02.23-ந்தேதி மதியம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கனை நேரில் சந்தித்து காணமால் போன தனது தாயாரை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்தார்.
அக்கோரிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் காவல் துணை ஆணையர் தெற்கு அவர்களுக்கு தனிப்படை அமைத்து கண்டுபிடிக்க உத்தரவிட்டதன் பேரில் தனிப்படையினர் 24 மணிநேரத்திற்குள் அதாவது 04.02.23-ந்தேதி மதியத்திற்குள் திருச்சி மாநகரத்தில் உள்ள CCTV காட்சிகளை தொடர்ந்து கண்காணித்து காணாமல் போன மூதாட்டி ரெயில் மூலம் தஞ்சாவூர் சென்றதை கண்டுபிடித்து, தஞ்சாவூரில் உள்ள விக்டோரியா என்ற பெயரில் இயங்கி வரும் முதியோர் இல்லத்தில் உள்ளார் என தெரிந்து அங்கு சென்ற தனிப்படையினர் மூதாட்டியை மீட்டு கொண்டுவந்தனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.M.சத்ய பிரியா, இ.கா.ப., அவர்கள் காணாமல் போன மூதாட்டியை அவரது மகன் பிரபாகரனிடம் ஒப்படைத்தார்கள். மேலும் மூதாட்டியின் மகன் கோரிக்கை விடுத்த 24 மணிநேரத்திற்குள் தனது தாயாரை கண்டுபிடித்து ஒப்படைத்ததற்கு திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
மேற்கண்ட காணாமல் போன மூதாட்டியை துரிதமாக செயல்பட்டு, மீட்ட தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.