இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து அதை கடத்தி வந்த கடத்தல்காரர்களை சுங்கத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக 380 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மண்டபம் சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஜோசப்ஜெயராஜ் தலைமையிலான சுங்கத்துறையினர் எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் சோதனையிட்டதில் அங்கு இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக சாக்கு மூட்டைகளில் 11 பண்டல்களாக பிரித்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 380 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 4 கோடி என சுங்கத்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை இலங்கைக்கு கடத்துவதற்காக எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்த கடத்தல்காரர்களை மண்டபம் சுங்கத்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி.பட்டிணம் போலீசார், மாவட்ட தனிப்பிரிவு போலீசார், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், குற்ற நுண்ணறிவுப் பிரிவு போலீசார், கடலோர காவல்படையினர் மற்றும் உளவுத்துறையினர் இந்த கடற்கரைப் பகுதியில் அடிக்கடி கண்காணித்து வரும் வேளையில் இது போன்ற கஞ்சா கடத்தல் சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்