தஞ்சை : தஞ்சாவூரில் இருக்கும் வங்கிகளில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட பணத்தில் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் கள்ளநோட்டு புழக்கம் குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். தஞ்சையில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்களில் ஒன்றில் இருந்தும் கும்பகோணத்தில் உள்ள 2 வங்கிக் கிளைகளில் இருந்தும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருக்கும் ரிசர்வ் வங்கி கிளைக்கு பணம் அனுப்பப்பட்டது.
சென்னை ரிசர்வ் வங்கி கிளையில் தமிழகத்தில் இருக்கும் வங்கிகளில் இருந்து பெறப்படும் பணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி தஞ்சாவூர், கும்பகோணம் வங்கிகளில் இருந்து வந்த பணத்தை ஆய்வு செய்த போது அதில் 37 கள்ள நோட்டுகள் வந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாவட்டம் முழுவதும் கள்ளநோட்டு புழக்கம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்