திருநெல்வேலி : பாளையங்கோட்டை, பெருமாள்புரம், குமாரசாமி நகரைச் சேர்ந்த நெல்லைகுமாரி என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் 44 சென்ட் இடம் சுத்தமல்லி, முதுமொத்தான் மொழி பகுதியில் உள்ளது. இவ்விடத்தை போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் நெல்லைகுமாரி நிலத்தினை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்களிடம் மனு அளித்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்னபாஸ் அவர்களுக்கு உத்தரவிட்டார்.
அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. மீராள் பானு அவர்கள், உதவி ஆய்வாளர் திரு. முருகன், அவர்கள் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு, நெல்லைகுமாரி என்பவருக்கு சொந்தமான 21 இலட்சம் மதிப்பிலான 3 ஏக்கர் 44 சென்ட் நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் நில உரிமையாளரிடம் (16.08.2022), மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 21 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மீட்டு, நிலத்தின் உரிமையாளரிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.