தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள மஞ்சநம்பிகிணறு கிராமத்தினை சேர்ந்தவர் அழகுதுரை (28), இவர் அப்பகுதியில் பூ விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் பூக்களை கொள்முதல் செய்து கோவில்பட்டியில் உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவியும் 3 குழந்தைகள் உள்ளன. மேலும் அழகுதுரை புதிய தமிழகம் கட்சியின் கிளை செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அழகுதுரை வீட்டின் முன் அமர்ந்து இருந்த போது மர்ம நபர்கள் சிலர் திடீரென அழகுதுரையை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் பலத்தகாயமடைந்து உயிருக்கு போராடிய அழகுதுரையை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லமால் அழகுதுரை பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறையினரின் விசாரணையில், அப்போது அழகுதுரை ஊரைச் சேர்ந்த கனகராஜ் அங்கு மது அருந்தி கொண்டு இருந்ததாக தெரிகிறது. தனக்கு மது பாட்டில் வாங்க வேண்டும் என்றும், பணம் குறைவாக இருப்பதால் 200 ரூபாய் தரும்படியும், அழகுதுரையிடம் கேட்டுள்ளார். இதற்கு அழகுதுரை மறுக்கவே, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கனகராஜ் வேலை செய்யும் இடத்தின் உரிமையாளர் ஸ்டாலின், கனகராஜ்க்கு ஆதரவாக, அழகுதுரையிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையெடுத்து அங்கிருந்தவர்கள் இரு தரப்பினையும் சத்தம் போட்டு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து, கனகராஜ் உறவினர்களோடு கும்பலாக, அழகுதுரையை சத்தம் போடுவதற்கு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரத்தில் கனகராஜ் மற்றும் அவரது உறவினர்கள் அழகுதுரையை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, ஸ்டாலின் , மாடசாமி, அவரது மகன் பட்டுராஜ், கனகராஜ், பால்பாண்டி ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார், நாகராஜ், பாலமுருகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.