சென்னை: சென்னையை அடுத்த மணலி அருகே சின்னசேக்காடு பார்த்தசாரதி தெருவில் உள்ள குடோனை மண்ணடி இப்ராஹிம் தெருவை சேர்ந்த முகமது மற்றும் சையது ஆகியோர் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்த நிலையில், அங்கு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக சைதாப்பேட்டை வனச்சரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து உதவி வன சரகர் பாதுகாவலர் திரு.மகேந்திரன் தலைமையில் வன சரக அலுவலர் திரு.ராஜேஷ் மற்றும் 10 பேர் கொண்ட தனிப்படை அதிகாரிகள் இன்று அதிகாலை சின்னசேக்காடு பார்த்தசாரதி தெருவில் உள்ள அந்த குடோனில் அதிரடியாக நுழைந்தனர்.
அப்போது சம்பந்தப்பட்ட குடோன் பூட்டிக் கிடந்தது .இதையடுத்து கிராம அலுவலர் டெல்லி கணேஷ் அவர் உதவியுடன் அந்த குடோனில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே சென்று சோதனையிட்டனர்.
அப்போது அங்கே சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 3 டன் எடை கொண்ட செம்மரக்கட்டை இருந்தது.பிரத்யேகமாக செம்மரத்தில் செய்யப்பட்ட அய்யனார், பூதம், குதிரை, விநாயகர் யாழி ஆகிய 6 மரச்சிலைகள் செதுக்கப்பட்டிருந்தன.
அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், தலைமறைவாக உள்ள முகமது மற்றும் சையது ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை