வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் குற்ற வழக்குகளில் திருட்டு போன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் தலைமை தாங்கினார். வேலூர் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) பாண்டியன் முன்னிலை வகித்தார். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துகொண்டு, போலீசாரால் மீட்கப்பட்ட 348 செல்போன்கள், 124 பவுன் நகைகள், 101 மோட்டார் சைக்கிள்கள், கார்கள் ஆகியவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 90 லட்சத்து 15 ஆயிரம். மேலும் குற்ற வழக்குகளில் திறமையாக செயல்பட்ட போலீசாரையும் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் மேல்பாடி, திருப்பத்தூர் மாவட்டத்தில், ஆலங்காயம் ஆகிய 2 காவல் நிலைய எல்லைகளில் கஞ்சா ஒழிக்கப்பட்டு கஞ்சா விற்பனை இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதனை கஞ்சா இல்லாத காவல் நிலையங்களாகவும் அறிவித்துள்ளனர். அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களையும் அவர் பாராட்டினார். கட்டுப்பாட்டு அறை அதைத்தொடர்ந்து காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கினார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதையும் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன் (திருவண்ணாமலை), தீபாசத்யன் (ராணிப்பேட்டை), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்) உள்பட காவல் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்