மதுரை : +2 தேர்வுகள் இன்று 02.03.2020- ம் தேதி முதல் 24.03.2020- ம் தேதி வரை நடைபெற உள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.IPS., அவர்கள் மற்றும் காவல்துறை கூடுதல் இயக்குநர், மதுரை மாநகர காவல் ஆணையர், திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்கள்.
தேர்வுகள் எழுதவுள்ள மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகள்:
மாணவ மாணவிகளே! நீங்கள் எவ்வாறு தேர்வு எமுதவேண்டும், இருநூறுக்கு இருநூறு எப்படி எடுப்பது, உங்களுக்காக தரப்பட்டுள்ள அந்த 3 மணி நேரத்தை எப்படி பயன்படுத்துவது போன்ற அபரிமிதமான தகவல்கள் உங்கள் பள்ளி ஆசிரியர்கள் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் உங்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஒரு சிலவற்றை மட்டும் குறிப்பாக நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.
1. உங்கள் பெற்றோர்கள் மற்றும் அசிரியர்களின் தியாகங்களை சற்று எண்ணிப் பாருங்கள். நீங்கள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்பதற்காக அவர்கள் படும் கஷ்டங்கள்தான் எத்தனை எத்தனை. அது மட்டுமா உங்களை உற்சாகப்படுத்தி உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக எத்துனை எத்துனை சங்கங்கள் எத்தனை சமுதாய ஆர்வலர்கள், அதற்காக எவ்வளவு உடல் உழைப்புகள், எவ்வளவு பொருளாதார செலவுகள் செய்யப்படுகின்றன என்பதை உணருங்கள். இத்தனையும் தாண்டி நீங்கள் தேர்வில் வெற்றிபெறாமல் தோல்வியடைந்து வந்தால் உங்களுக்காக உழைத்தவர்களுக்கு செய்யும் நன்றிக் கடன் இதுதானா? உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக நீங்கள் அல்லவா முதலில் அக்கரை எடுக்கவேண்டும்.
2. அரசுத்தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு பெரும் சவாலாக தற்போது வந்திருப்பது கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள். மாணவிகள் இவற்றை பார்ப்பது குறைவுதான் என்றாலும் பெரும்பாலான மாணவர்கள் அதில் வீழ்ந்துகிடப்பதை பார்க்கிறோம். மாணவர்களே நீங்கள் டிவியில் விளையாட்டு போட்டிகளை தேர்வுகாலத்தில்கூட பார்த்துக்கொண்டிருந்தால் உங்களைவிட பெரும் நஷ்டவாளிகள் யார் இருக்க முடியும்?
3. மாணவிகள் மட்டும் என்ன எந்தவித தொந்தரவும் இல்லாமல் படிக்கமுடிகிறதா? அவர்களின் படிப்புகளில் தடை வைக்கும் முகமாக தெருக்களில்,வீதிகளில் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள். அலறும் மைக்செட்டுகள் இதற்கு மத்தியில்தான் மாணவிகளே நீங்களும் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நிலை உள்ளது.
4. அரசு தேர்வு எழுதவிருக்கும் மாணவ மணவிகளே! தேர்வை எண்ணி நீங்கள் பதட்டப்படாதீர்கள், இறைவனை வழிபட்டு தேர்வு எழுதச்செல்லுங்கள். தேர்வு எழுத ஆரம்பிக்கும் போது கடவுள் உங்களுக்கு ஞாபக சக்தி கொடுத்து உதவுவார்.
5. முதலில் கேள்வித்தாளை ஒன்றுக்கு இருமுறை படித்துப் பாருங்கள். விடைகளில் தவறு ஏற்பட்டால் அதை அடித்து அடித்து எழுதாதீர்கள். தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள். சற்று யோசனை செய்துதான் விடை எழுத முடியும் என்ற, சிறு கேள்விகளுக்கு விடைதாள்களில் அதற்கான இடத்தை விட்டுவிட்டு அடுத்த கேள்விக்கு விரைவாக செல்லுங்கள்.
6. நீங்கள் வழக்கமாக பயன்படுத்திடும் பேனா பென்சில்களையே தேர்வு எழுதுவதற்கும் பயன்படுத்துங்கள். புதிய பேனாக்கள் தேவையில்லை. தேர்வு எழுதியவுடன் நீங்கள் எழுதியது சரிதானா?என்பதை இறுதியில் மறுபடியும் படித்துப்பாருங்கள்.
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்