இராமநாதபுரம்: இராமநாதபுரம் தனுஸ்கோடியில் 1964 ஆம் ஆண்டு டிச.23ம் தேதி ஏற்பட்ட புயலில் உயிரிழந்தவர்களுக்கு, 55-வது நினைவு தினமான டிச.23ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக காவல் ஆய்வாளர் திருமதி.திலகராணி அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
1964 தனுஷ்கோடி புயல் இந்தியாவின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடியையும், இலங்கையின் வடக்குப் பகுதியையும் 1964 டிசம்பர் 22 முதல் டிசம்பர் 25 வரை தாக்கியது. 1,800 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இராமேசுவரம் தீவின் கிழக்கு முனையில் அமைந்திருந்த தனுஷ்கோடி நகரம் முழுவதும் புயலால் அழிந்து போனது.
தனுஷ்கோடி 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட மீனவ நகரம். மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது சுனாமி போன்ற ராட்சத அலை எழுந்து ஊருக்குள் புகுந்தது. அதை அப்போது கடல் கொந்தளிப்பு என்று பொதுவான வார்த்தையால் அழைத்தனர். இந்த அலை 40 முதல் 50 அடி உயரத்துக்கு எழும்பி வந்தது.
அதிகாலை 3 மணி அளவில் ஆழிப் பேரலை தனுஷ்கோடிக்குள் புகுந்து, நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடி மக்களில் முன்னூறுக்கும் அதிகமானோர் இதில் உயிரிழந்தனர். இந்திய பெருநிலத்துக்கும் இராமேசுவரம் தீவிற்கும் இடைப்பட்ட பாம்பன் தொடருந்து தடம்கொண்ட பாலம் பேரலையில் உடைந்தது. மேலும் 23 நள்ளிரவுக்கு 5 நிமிடம் முன் பாம்பன் இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட பாம்பன்-தனுஷ்கோடி உள்ளூர் பயணி (passenger) இரயில் தனுஷ்கோடி தரிப்பிடத்தின் நுழைவாயிலை அடைகையில் ஒரு பேரலையால் அடித்துக் கவிழ்க்கப்பட்டு அனைத்து பயணிகளும் உயிர்மாண்டனர்.
தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. மண் மூடிப் போன மேடாக மாறிப் போனது. புயலின் அடையாளமாக இன்று சிதிலமடைந்த ஒரு தேவாலயமும் சில கட்டடங்களும் மட்டுமே எஞ்சியுள்ளன. தனுஷ்கோடி நகரம் புதிப்பிக்கப்படவில்லை. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்