திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஜமுனாமரத்தூர் வனப்பகுதியில் சட்டவிரோதமாக 1400 லிட்டர் கள்ளச்சாராயம் தயார் செய்த ஊரல்களை அழித்து பத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பேரல்களையும், சாராயம் தயார்செய்ய பயன்படுத்திய ரசாயன பொருட்களையும் பறிமுதல் செய்தார்கள்.
ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் உள்ள கோரைமடவு மலை கிராம வனப்பகுதியில் கள்ளச்சாராயம் தயார் செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் அவர்களின் ஆலோசனையின்படி போளூர் காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில், வனப்பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை கையும் களவுமாக பிடிக்க சென்றபோது வனப்பகுதியில் கள்ளச்சாராயம் தயார் செய்து கொண்டிருந்தவர்கள் காவல் துறையினர் வருவதை கண்டவுடன் வனப்பகுதிக்குள் மாயமானார்கள்.
மேலும் இதனை தொடர்ந்து வனப்பகுதிக்குள் 10க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பேரல்களில் 1400 லிட்டர் சாராயம் தயார் செய்து வைத்திருந்த ஊரல்களை ஜமுனாமரத்தூர் காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், முருகன், தனிப்பிரிவு காவலர் விஜய் மற்றும் காவலர்கள் அழித்து கள்ளச்சாராயம் தயார் செய்ய பயன்படுத்திய பல்வேறு உபகரணங்களை கைப்பற்றி வனப்பகுதிக்குள் மாயமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.