சென்னை: சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக K-10 கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், 25.06.2021 அன்று மதியம் நெற்குன்றம், பெரியார்நகர், காமராஜர் நெடுஞ்சாலை, எண்.77 என்ற முகவரியில் உள்ள மளிகை கடையை சோதனை செய்தபோது,
அங்கு தடை செய்யப்பட்ட மாவா புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்த 1.சூரியகண்ணன், வ/24, நெற்குன்றம் மற்றும் சூரியகண்ணனின் தந்தை 2.கனகலிங்கம், வ/52, நெற்குன்றம் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மளிகை கடையில் மறைத்து வைத்திருந்த 123 கிலோ மாவா புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
மேற்படி மளிகை கடையை காவல் குழுவினர் சோதனை செய்தபோது கடையின் உரிமையாளர் கனகலிங்கம் மற்றும் அவரது மகன் சூரியகண்ணன் ஆகிய இருவரும் காவல்குழுவினரை பணி செய்யவிடாமல் தடுத்து ஆபாசமான வார்த்தைகளை பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் மேற்படி இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் படி அரசு ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற குற்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.