திருவண்ணாமலை : தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல் துறை இயக்குனர் திரு.ராஜேஷ் தாஸ்,IPS., அவர்களின் அறிவுறுத்தலின் படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாய் கிராமத்திற்கும் ஒரு கிராம விழிப்புணர்வு குழு பொறுப்பு காவலர் என மாவட்டத்திலுள்ள 960 தாய் கிராமங்களிலும் கிராம விழிப்புணர்வு குழு(village Vigilance Committee-VVC) ஆரம்பிக்கப்பட்டு, கிராம விழிப்புணர்வு குழு பொறுப்பு காவலர்கள் (Village Vigilance Police Officer-VVPO) ஒவ்வொரு கிராமங்களிலும் நியமிக்கப்பட்டனர். அவர்களை காவல்துறை உயரதிகாரிகள் கிராமத்தினரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். ஒவ்வொரு தாய் கிராமத்திற்கும் கிராம விழிப்புணர்வு குழு காவலர் தலைமையில் ஒரு வாட்ஸ் அப் குழு ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வாட்ஸப் குழுவில் குறிப்பிட்ட கிராமத்தின், கிராம விழிப்புணர்வு குழு காவலர், கிராம நிர்வாக அலுவலர், அந்த கிராம எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தின் காவல் உதவி ஆய்வாளர், காவல் ஆய்வாளர், அந்த கிராமத்தின் முக்கிய நபர்கள் மற்றும் பொதுமக்கள் இடம் பெற்று இருப்பார்கள். இந்த வாட்ஸப் குழுவில் தங்கள் கிராமம் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதர அரசுத்துறைகள் தொடர்பான தகவல்களை காவல்துறை அதிகாரிகள் மூலம் குறிப்பிட்ட அரசுதுறையின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கிராம விழிப்புணர்வு குழு மூலம் விபத்தில்லா திருவண்ணாமலையை உருவாக்கும் நோக்கில் மாவட்டத்திலுள்ள விபத்து நடக்க வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து, தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கிராம விழிப்புணர்வு குழுக்களுக்கு போக்குவரத்து உபகரணங்கள் வழங்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.
மேலும் கிராம விழிப்புணர்வு குழு காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், முதற்கட்டமாக கண்ணமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் கிராம தலைவர்கள், பொதுமக்கள் போன்றோர்களின் முயற்சியால் 120 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு 15.01.2020-ம் தேதி வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.N.காமினி,IPS., அவர்கள், CCTVகேமரா கண்காணிப்பு அமைப்பினை, கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.அரவிந்த் அவர்கள், தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.அசோக் குமார் அவர்கள், ஆரணி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கோடிஸ்வரன் அவர்கள் உடனிருந்தனர்.மேலும் கிராம கண்காணிப்பு குழுக்கள் மூலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்