திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே எரமநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகன் 53 கூலி தொழிலாளி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட் அருகே சென்ற போது 8ம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாள்.
அதை பார்த்த முருகன், மாணவியிடம் பேசி அருகில் இருந்த ஒரு குடிசைக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அது குறித்து யாரிடமும் சொல்ல கூடாது என்றும் மாணவியை மிரட்டினார். இதனால் பயந்து போன மாணவி அழுது கொண்டே வீட்டுக்கு சென்றது. அவளின் நிலை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரித்தனர். இதையடுத்து மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்தது. நீதிபதி புருஷோத்தமன் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் மொத்தம் 21 பேர் சாட்சியம் அளித்தனர். நீதிபதி புருஷோத்தமன் இன்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா