சென்னை: ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வழக்கறிஞர்கள் உருவாக காரணமாக இருந்த, ஆந்திர மாநில தனியார் சட்டக் கல்லுாரி முதல்வரை, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சங்கத்தின் செயலர் ராஜா குமார். இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்புகாரில், வில்லிவாக்கம் சேர்ந்த ரயில்வே ஊழியரான விபின் (59). இவர், ரயில்வே துறையில் பணிபுரிந்தபடி, ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள, தனியார் சட்டக் கல்லுாரியில், 2015 – 18ம் ஆண்டு வரை, எல்.எல்.பி.இ படித்துள்ளார். சட்டக் கல்லுாரி தேர்வு எழுதுவதற்கு, குறைந்தபட்சம், 70 சதவீதம் வருகை பதிவேடு கட்டாயம்.
விபின் ரயில்வே துறையில் பணியாற்றி வந்ததால், கல்லுாரிக்கு சென்றது போல் போலியாக வருகை பதிவேடு சான்றிதழ் பெற்று சட்டப் படிப்பை முடித்துள்ளார்.
இவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில், வழக்கறிஞராக பதிவு செய்ய விண்ணப்பித்து இருந்தார். அதை நிராகரித்து விடவே, விபின்இ உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான உலகநாதன், மோகன்தாஸ் ஆகியோருக்கு, பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து, வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.
2017ல், ரயில்வே துறையில் இருந்து விருப்ப ஓய்வும் பெற்றுள்ளார். இவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற காவல் நிலைய காவல்துறையினர் விசாரித்து, விபின் மற்றும் உலகநாதன், மோகன்தாஸ் ஆகியோரை கைது செய்தனர். பின் இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்த மோசடி குறித்து, கூடுதல் ஆணையர் திரு.ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான காவல் துறையினர் விசாரித்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள தனியார் சட்டக் கல்லுாரி முதல்வர் ஹிமவந்த குமார் (54) என்பவர், கல்லுாரிக்கே வராத 1,000க்கும் மேற்பட்டோருக்கு 80 சதவீதம் கல்லுாரிக்கு வருகை தந்தது போல பதிவேடு தயார் செய்து, சான்றிதழ் வழங்கியுள்ளார்.
இதற்கு, கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி இருப்பதும் தெரிய வந்தது. இவர் வழங்கிய சான்றிதழ் வாயிலாக, 1,000க்கும் மேற்பட்ட போலி வழக்கறிஞர்கள் உருவாகி இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, ஹிமவந்த குமாரை, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். மேலும்இ போலி சான்றிதழ்கள் வாயிலாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ள வழக்கறிஞர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.