தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே வீர மாணிக்கதில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 3 கோயில் தங்க நகைள் சுமாா் 100 சவரனை கையாடல் செய்த பாஜக பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்
தூத்துக்குடி அருகே வீர மாணிக்கதில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 3 கோயில்களில் தங்கநகைள் சுமாா் 100 சவரனை கையாடல் செய்த பாஜக பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமம் வீர மாணிக்கம். இங்கு வீர பத்ரகாளியம்மன், சந்தி அம்மன், சுடலை மாடன் ஆகிய மூன்று கோவில்கள் உள்ளன. இன்று கோவில்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு கோவில் நகைகள் சுமார் 100 சவரன் தங்க நகைகளை இந்து சமய அறநிலைத்துறையிடம் ஒப்படைக்கக் கோரி ஊர்மக்கள் மற்றும் அறநிலையதுறை அதிகாரிகள் கேட்டு வந்தனர்.
ஆனால் கோவிலை நிர்வாகம் செய்து வந்த பாஜக பிரமுகர் பட்டு ராமசுந்தரம் நகைகளை ஒப்படைக்கவில்லை. இதையடுத்து கிராம மக்கள் நகைகளை மீட்டு நகைகளை கையாடல் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை தக்காா் (Executive officer) திருமதி.காந்திமதி தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தாா்.
இதுகுறித்து விசாரணை செய்த குரும்பூர் போலீசார் நகைகளை கையாடல் செய்த பட்டு ராமசுந்தரம் அவரது சகோதரர்கள் கார்த்திகேயன், முத்து மற்றும் உறவினர்கள் முருகேசன், திருமால், கதிரேசபாண்டியன் ஆகிய 6 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் இவர்களை தேடி வருகின்றனர்.
மேலும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இருந்து தனக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி பட்டு ராமசுந்தரம் தரப்பில் இரண்டு முறை மனு தாக்கல் செய்த போதும் கிராம மக்கள் ஆட்சேபனை மனு தாக்கல் செய்ததையடுத்து அவரது முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த 6 பேரும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
போலீசாரால் தேடப்பட்டு வரும் பாஜக பிரமுகர் பட்டு ராமசுந்தரம் பாஜக பிரமுகர்களுடன் தான் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அரசு அதிகாரிகளையும் காவல்துறையினரையும் தான் ஒரு முக்கிய பிரமுகர்கள் போன்ற தோற்றத்தை காட்டி வந்துள்ளார். கோவில் நகைகளை அபகரித்த இந்த கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வீர மாணிக்கம் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.