தென்காசி : தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், உத்தரவின்பேரில், தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மற்றும் தென்மண்டல காவல்துறை தலைவரின் தனிப்படையினர் தென்காசி பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தென்காசி புதிய பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் தென்காசி உடையார் தெருவை சேர்ந்த ராஜா மகன் மணிச்செல்வன் (28), செங்கோட்டை பெரியபிள்ளைவலசை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அனஞ்சகும்பு மகன் மணிகண்டன் (24), என தெரியவந்தது போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்தனர். அப்போது ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 4 கிலோ கஞ்சாவும், ரூ.2 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.