இன்றைய உலகில் தொழில்நுட்பம் என்பது மிக பெரிய மாற்றங்களை மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திவிட்டது. இனி இவையன்றி வாழ்வதே சிரமம் என்றாக கூடிய நிலைமையும் வந்துவிட்டது. நமது சந்ததிகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை கணினியில் விளையாடி பழக வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. இந்த தொழில்நுட்பங்களில் இன்று அதிகம் பேசப்படும் இணைய குற்றங்களை பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
இணைய குற்றங்கள் எனபது தகவல் தொழில்நுட்பங்களை குறிவைத்து அல்லது தகவல் தொழில்நுட்பங்களை உபயோகம் செய்து செய்யப்படும் குற்றங்கள் ஆகும்.
இன்னும் தெளிவாக சொன்னால், இன்டர்நெட், மொபைல் மற்றும் மற்ற பல சாதனங்களை பயன்படுத்தியும் அல்லது அவற்றை தாக்கி அவற்றுள் ஊடுருவி தகவல்களை திருட அல்லது அழிக்கும் செயல்கள் ஆகும்.
- தகவல் தொழிநுட்ப சேவைகளை திருடுவது (Data Hijack)
- தகவல்களை அழிப்பது
- இணயத்தில் முகம் தெரியாதவர்களை ஏமாற்றுவது கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களிலிருந்து தகவல்களை திருடுவது (Hacking, Virus/Worm attacks, DOS attack etc)
- மற்றவர்களின் தகவல்களையோ, புகைப்படங்களையோ தவறாக பயன்படுத்துவது.
- சட்டத்திற்கு புறம்பான பாலியல் குற்றங்களை இணையம் மூலம் ஏற்படுத்துவது (Pornography)
- மின்னஞ்சல் மற்றும் இன்டர்நெட் கால் மூலம் கொலை மிரட்டல்கள்
- இணையவழி பொருளாதார குற்றங்கள் (Cyber Terrorism, IPR violations, Credit card frauds, EFT frauds)
- மற்றவர்களின் மின்னஞ்சல் மற்றும் சோசியல் நெட்வொர்கிங் கணக்குகளை திருடி அவதூறு பரப்புவது.
இந்த குற்றங்களை தடுக்க வேண்டுமெனில் இத்துறையில் மிகவும் திறமை வாய்ந்தவர்களும் அதி நவீன தொழில்நுட்பங்களும் அவசியம் தேவை. இணையகுற்றங்களை தடுப்பதில் மிகவும் கடுமையான முயற்சிகளை இந்திய அரசாங்கம் எடுத்துக்கொண்டுதான் உள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் இதற்கான வழிமுறைகளையும் உள்ளடக்கியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் அந்தரங்க வீடியோக்கள், அவரது வீட்டில் இருந்த ஸ்மார்ட் டிவி மூலம் இணையத்தில் பரவிய சம்பவம், கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த திருமணமான இளைஞர் ஒருவர், அயல்நாட்டில் தங்கி வேலைபார்த்து வருகிறார். அவர் சில வாரங்கள் முன்பு தனது கணினியின் மூலம், தனது மனைவியுடன் ஸ்கைப்பில் உரையாடியுள்ளார். பின்னர், இணையத்தில் வந்த விளம்பரம் ஒன்றில் இருந்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்துள்ளார். அப்போது, அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில், அவரது மனைவி உடைமாற்றுவது உள்ளிட்ட அந்தரங்கக் காட்சிகள் பதிவாகி இருந்தன. அவர் தனது மனைவியிடம் இது பற்றிக் கேட்டபோது, அவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. இதனால், தங்கள் படுக்கை அறையில் யாரோ ரகசியமாக கேமரா பொருத்திவிட்டதாகவே இருவரும் பயந்தனர்.
இந்நிலையில், கேரளாவில் உள்ள மனைவியின் புகைப்படங்கள் எப்படி இணையத்திற்கு எப்படி வந்திருக்கும் என்று யோசித்த இளைஞர், அயல்நாட்டில் இருந்தபடியே கேரள சைபர் கிரைம் காவல் பிரிவில் புகார் அளித்தார்.
கேரளாவில் உள்ள இளைஞரின் வீட்டுக்குச் சென்று ஆய்வு செய்த காவல்துறையினர், படுக்கையறையில் உள்ள ஸ்மார்ட் டிவி மூலம் இருவரும் ஸ்கைப்பில் உரையாடும் வழக்கத்தை வைத்துள்ளதையும், அந்த உரையாடல் முடிந்த பின்னரும் மனைவி ஸ்மார்ட் டிவியின் இணைய இணைப்பை துண்டிக்காததால், இணைய ஹேக்கர்கள் ஸ்மார்ட் டிவியின் கேமரா மூலம் அந்த அறையில் நடப்பது அனைத்தையும் படம் பிடித்து, அதே ஸ்மார்ட் டிவி மூலம் அந்தரங்கக் காட்சிகளை இணையத்தில் பரப்பியதையும் கண்டறிந்தனர்.
கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் சூரத் நகரைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதிக்கும் இதேதான் நடந்தது. இன்னும் எத்தனை வீடுகளில் பெண்கள் இப்படியாகக் கண்காணிக்கப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.
ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு போன்கள் ஆகியவை ஹேக் செய்யப்படும் போது, அவற்றில் உள்ள கேமரா உள்ளிட்ட அனைத்து சாதனங்களையும் ஹேக்கர்கள் பயன்படுத்தலாம். எனவே இவற்றைப் பயன்படுத்துபவர்களும் ஸ்மார்ட்டாகவும், கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியம். படுக்கையறைகளில் இவற்றைப் பயன்படுத்தாமலேயே இருப்பது சிறந்தது.