கடலூர் : தமிழக காவல்துறை கணினி மயமாக்கல் திட்டத்தின் கீழ் காவல்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நவீனமயமாக்கபட்ட ஸ்மார்ட் காவலர் செயலியை(Smart Kavalar App )கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS அவர்கள் அறிமுகப்படுத்தினார். கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களில் கடலூர் புதுநகர், சிதம்பரம் டவுன், நெய்வேலி டவுன்ஷிப், சேத்தியாத்தோப்பு, விருத்தாச்சலம், பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய 7 காவல் நிலையங்களில் முதல்கட்டமாக நவீனமாக்கபட்ட புதிய இ-பீட் செயலி (E- Beat) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
காவலர்கள் இப்புதிய செயலி மூலம் தினந்தோறும் காலை மற்றும் மாலையில் நேரில் சென்று கண்காணிப்பார்கள். இந்த செயலி மூலம் உயர்அதிகாரிகள் ரோந்து காவலர்களின் நடமாட்டத்தை இருந்த இடத்தில் இருந்து கண்காணிக்க முடியும். கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்ல இருந்தால் அல்லது தொடர்ந்து பூட்டி கிடக்கும் வீடுகள் மற்றும் தனியாக வசிக்கும் முதியோர்கள் தங்களது காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள்.