கோவை: தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் இன்று அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் தவழ்கின்றன. அனைத்து ஸ்மார்ட்போன்களும் நல்லவை என சொல்லிவிட முடியாது.
குறிப்பிட்ட பிராண்ட் மட்டுமே கோளாறாக உள்ளன என்றும் சொல்ல முடியாது. 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் போன்கள் முதல் விலை உயர்ந்த போன்கள் வரை வெடிக்கின்றன. அதற்குக் காரணம் இரவு முழுவதும் நீண்ட நேரம் சார்ஜ் போடுவதால் தான் என்கின்றனர்.
அதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கின்றன. ஆகவே சார்ஜ் போடுவதில் அனைவரும் கவனத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
தற்போது கோவை மாவட்டத்திலும் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. கோவை மாவட்டம் மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மயில்சாமியின் மகன் சிவராம். 18 வயதான இவர் கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி தகவல் தொழில்நுட்பம் முதலாம் ஆண்டு படித்துவந்தார்.
இவர் கடந்த 9ஆம் தேதி இரவு வழக்கம்போல வீட்டில் தனது அறையில் படுக்கையில் இருந்தவாறு செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். பின்னர் செல்போனை சார்ஜ்ஜில் போட்டுவிட்டு தூங்கிவிட்டார்.
மறுநாள் அதிகாலை மின் இணைப்பில் இருந்த செல்போன் திடீரென்று வெடித்துள்ளது. அப்போது ஏற்பட்ட தீ சிவராமின் படுக்கையில் பரவி, அவர் மீதும் பற்றியது.
இதில் உடலில் பல்வேறு பகுதிகளில் அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சிவராம் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக மதுக்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆகவே இதுபோன்ற சம்பவங்கள் நேராமல் இருக்க அஜாக்கிரதையாக இல்லாமல் தூங்க செல்வதற்கு முன் சார்ஜ் போடாமல் இருங்கள்.
