கோவை: கோவை, சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகைகளை கொள்ளையடித்தனர். கருமத்தம்பட்டி சுண்டை மேடு பகுதியை சேர்ந்தவர் மாறன்(45) இவரது மனைவி ராஜலட்சுமி(40). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மாறன் தனது வீட்டை விற்க சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.இது சம்பந்தமாக இருவர் கணவன் மனைவி எனக் கூறிக்கொண்டு மாறன் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது மாறன் வேலைக்கு சென்று விட்டதால் ராஜலட்சுமி மட்டும் தனியே இருந்துள்ளார். அவரிடம் பேசுவது போல் பேசி திடீரென மயக்க ஸ்பிரேவை அவர் முகத்தில் அடித்தனர். இதையடுத்து ராஜலட்சுமி மயங்கி விழுந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள் ராஜலட்சுமி அணிந்து இருந்த நாலு பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது சம்பந்தமாக ராஜலட்சுமி கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்