சென்னை: சீன அதிபர் வருகையின்போது ஒத்துழைத்த மக்களுக்கு காவல்துறை சார்பில் நன்றி தெரிவிப்பதாக சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர், IPS தெரிவித்தார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், கடந்த 11 மற்றும் 12ம் தேதிகளில் சென்னையில் தங்கியிருந்தபடி, காரில், மாமல்லபுரம் சென்று வந்தார். வெள்ளிக்கிழமை பிற்பகல், காரில் மாமல்லபுரம் சென்றுவிட்டு, இரவு, சென்னை நட்சத்திர ஹோட்டலுக்கு வருகை தந்தார். மறுநாள், காலையில் மீண்டும் காரில் மாமல்லபுரம் சென்றுவிட்டு மதியம் சென்னைக்கு திரும்பினார்.
இதனால், சென்னையில், பல மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போலீசாருக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தது.
இந்த நிலையில், சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் அளித்த பேட்டி: சமீப காலத்தில் எந்த ஒரு மிகப்பெரிய தலைவரும் தமிழகத்தில், இந்த அளவு தூரத்தை சாலை மார்க்கமாக கடந்தது கிடையாது. எனவே அதற்கு ஏற்ப நாங்கள் பாதுகாப்பு வழங்குவது சவாலான விஷயமாக இருந்தது.
எனவே, 110 சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 200 பேர் கொண்ட தனித்தனி குழுவை ஒரு மாதம் முன்பாகவே அமைத்தோம். சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 35 கிலோ மீட்டர் தொலைவுக்கு தீவிர ஆய்வுகளை ஆரம்பித்தோம்.
இந்த பாதையில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று ஆய்வு செய்தோம். சீன அதிபர் செல்லும் வழியில் எந்த மாதிரி சவால்கள் ஏற்படும் என்று எங்களுக்கு நாங்களே கேள்விகளை கேட்டு அவை ஒன்றையும் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்ற விடையையும் கண்டுபிடித்தோம்.
ஜிஎஸ்டி சாலை ஓஎம்ஆர் சாலை பகுதிகளில் இந்த குழு தீவிரமாக ஆய்வு செய்ததில், இந்த பாதையில் எத்தனை ஐடி நிறுவனங்கள் உள்ளன, எத்தனை சிசிடிவிக் கள் உள்ளன, எத்தனை விடுதிகள் உள்ளன, எத்தனை வீடுகளில் உரிமையாளர்கள் இருக்கிறார்கள், எத்தனை வீடுகளில் வாடகைக்கு குடியிருப்போர் இருக்கிறார்கள், சாலையை நோக்கி எத்தனை கதவுகள், ஜன்னல்கள் உள்ளன எத்தனை மின்சார கம்பங்கள், குப்பை தொட்டிகள், ரயில்வே பாலங்கள் உள்ளன என்பது உள்ளிட்ட விவரங்களையும் இந்தக் குழு ஆய்வு செய்தது.
மொத்தம் 110 குழுக்கள் அமைக்கப்பட்டதால் எங்கள் பணி எளிதாக இருந்தது. இவர்கள் ஒவ்வொரு குழுவிற்கும் சுமார் 300 மீட்டர் சுற்றளவுக்கு ஆய்வு செய்வதற்கு அசைன்மென்ட் ஒதுக்கப்பட்டது. இதற்கு முன்பாக சீன அதிபர் வருகை தந்த போது எந்த மாதிரியான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன என்பது தொடர்பாக ஆய்வு நடத்தினோம். அந்த வீடியோக்களை பார்த்து அந்த வீடியோ தகவல்களை அனைத்து காவல் துறையினருக்கும் ஷேர் செய்தோம். இது மாதிரி போராட்டங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு எந்த மாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வு செய்தோம்.
இதேபோல பேஸ்புக் ட்விட்டர் போன்றவற்றில் செய்யப்படும் பதிவுகளையும் தீவிரமாக கண்காணித்து இதன் மூலமாக எந்த மாதிரி போராட்டங்கள் அல்லது ஆபத்து வரக்கூடும் என்பதை யூகித்தோம். கிருஷ்ணகிரி செக்போஸ்ட் முதலே நாங்கள் சோதனை ஆரம்பித்துவிட்டோம், நடத்தினார். பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கான்ஸ்டபிள்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை தீவிரமாக கண்ணுறக்கம் இல்லாமல் பணியாற்றினார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
3 மட்டத்தில் சீன அதிகாரிகள், நமது காவல்துறையினருடன் சந்திப்பு நடத்தினர். 3வது குழுவில் மிகவும் சீனியர் அதிகாரிகள் வந்திருந்தனர். அவர்கள் தங்களிடம் உள்ள உளவுத்துறை தகவல்களை வைத்து, தேவைப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கேட்டுக் கொண்டனர். ஆனால் நாங்கள் ஏற்கனவே அதை செய்துவிட்டோம் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டனர். நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளீர்கள் என அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இவ்வாறு சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் தெரிவித்தார்.
ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழக போலீஸ் என நிரூபித்துவிட்டார்கள்.