மதுரை : உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திர திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 5ந் தேதி சித்ரா பௌர்ணமி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, வைகை அணையில் இருந்து நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. பொதுவாக வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீரானது மதுரை வந்தடைய குறைந்தபட்சம் 4 நாட்களாகும். ஆனால், கடந்த சில நாட்களாக மதுரை தேனி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் நிலத்தடி நிலப்பரப்பு ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக, வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் வேகமாக ஒரே நாளில்இன்று மதுரை வந்தடைந்தது. குறிப்பாக, கடந்த சில தினங்களாக தண்ணீர் இன்றி வறட்சியாக
காணப்பட்ட வைகை தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், இது குறித்து பொதுமக்கள் கூறும் போது , இந்த ஆண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நாள் என்று வைகை ஆற்றில் தண்ணீர் அதிக அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும், வைகை அணையில் திறக்கப்பட்ட நீரானது மதுரை வந்தடைந்ததால் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி