வேலூர்: வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் தலைமை தாங்கினார். ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.விநாயகம், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக காவலர் மருத்துவமனை டாக்டர் சுகந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காவல்துறை சார்பில் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வருபவர்கள், வக்கீல்கள் உள்ளிட்ட அனைவரும் கைகளை கழுவ தண்ணீர் தொட்டியும், கொரோனா விழிப்புணர்வு பேனர் போலீஸ் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பலர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களில் சிலர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வருகின்றனர். எனவே அங்கு பணிபுரியும் போலீசார் அனைவரும் முகக்கவசம் அணிந்தபடி புகார் மனுக்கள் பெற வேண்டும்.
அதேபோன்று அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பணிபுரிபவர்களும் முகக்கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். தினமும் தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், காவல் ஆய்வாளர்கள், உதவி-காவல் ஆய்வாளர்கள், காவல் கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.














