திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள கேத்தனூர் கிராமத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அரித்துவாரமங்கலம் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கேத்தனூர் கீழத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி வெளி மாநிலத்துக்கு கடத்தி செல்வதற்காக சரக்கு ஆட்டோவில் ஏற்றப்பட்டு கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து கடத்தி செல்ல இருந்த 4 டன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து திருவாரூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் அரித்துவாரமங்கலம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் 2 பேரிடமும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.