தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் சில பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும். அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம்.
1. இளஞ்சூடான நீர்
இளஞ்சூடான நீர் – காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன்மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும். மலச்சிக்கலைச் சரிசெய்யும்.
2. வெந்தயம் நீர்
வெந்தயம் நீர் – வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். சீரகத் தண்ணீர் அஜீரணக் கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
3. தேன்
தேன் – இளஞ்சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால், உடலுக்கு பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்து. குரலை மென்மையாக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வயிற்று எரிச்சலைக் குறைக்கும். செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலைச் சரிசெய்யும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் எடையைக் குறைக்கும்.
4. காய்கறிகள்
காய்கறிகள் – கேரட், முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளின் சாறு, உடலைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தை விருத்தியாக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். சருமத்தைப் பளபளப்பாக்கும். கொழுப்பைக் குறைக்கும்.
5.பழங்கள்
பழங்கள் – வெறும் வயிற்றில் பழங்களாகவும் சாறாகவும் சாப்பிடலாம். உடல் ஆரோக்கியம் பெறும். உடலின் சக்தி அதிகரிக்கும். சருமம் பொலிவு பெறும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிவி, ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. அதுபோல வாழை, ஆரஞ்சு ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. பழங்களை வேகவைத்துச் சாப்பிடக் கூடாது.
6. அரிசிக்கஞ்சி
அரிசிக்கஞ்சி – குறைந்த அளவு கலோரி கொண்டது. கஞ்சி உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றுவதால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எளிதில் செரிமானம் ஆகும். சளி சவ்வுப் படலத்தில் உண்டாகும் புண்களை ஆற்றும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். கஞ்சி, இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் வெப்பத்தைக் குறைக்கும். கஞ்சியில் வைட்டமின் பி-6, பி-12 அதிகமாக உள்ளன. வயது முதிர்ந்த தோற்றத்தையும் எலும்பு சார்ந்த நோய்களையும் சரி செய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அரிசிக் கஞ்சியை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளக் கூடாது.
7.உளுந்தங்களி
உளுந்தங்களி – பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் அரிசி மாவுக்கு, 25 கிராம் உளுந்து என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாகக் கிண்டிச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும்.
8.முளைக்கட்டிய பயறு
முளைக்கட்டிய பயறு – முளைக்கட்டிய பயறில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரோட்டின், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் சூரியக் கதிரில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கிறது. தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இதய நோயில் இருந்து நம்மைக் காக்கும். உடல் எடையைக் கட்டுப்படுத்தும். வாயுத்தொல்லை உடையவர்கள், அலர்ஜி ஏற்படுகிறவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.