தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் உரிமம் பெற்ற வெடி பொருட்கள் விற்பனையாளர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் தர்மபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள், தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வெடிபொருட்கள் விற்பனையாளர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் அரசு விதிமுறைகளை மீறி செயல்படக்கூடாது கொள்முதல், விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் போதிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வெடிபொருட்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
உரிமம் இல்லாத நபர்களுக்கு வெடிபொருட்களை விற்பனை செய்யக்கூடாது முறையான உரிமம் இன்றி வேறு பொருள்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் வெடிபொருட்களை ஏற்றி செல்வதற்கு அனுமதிக்க கூடாது எனவும் வெடி பொருட்களின் தினசரி கொள்முதல் விற்பனை மற்றும் ஏற்றுமதி விவரத்துடன் இருப்பு விவரத்தையும் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் உட்கோட்ட காவல் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் அலுவலகம் ஆகியவற்றிற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். இதை தவிர்த்து விதி மீறல்களில் ஈடுபடும் வெடிபொருட்கள் விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.இளங்கோவன் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.