கோவை: கோவை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலமாக தகவல் வந்ததையடுத்து கோவை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் சிறப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 7 மணிக்குஒரு மர்ம போன் வந்தது. அதனை எடுத்து பேசிய போது எதிர்முனையில் பேசியவர் நான் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன்.
அப்போது கேரளாவைச் சேர்ந்த 2 பேர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைப்பது குறித்து பேசிக்கொண்டிருந்தனர். அதை நான் கேட்டேன் . அதனால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கிறேன். என கூறி போனை வைத்து விட்டார்.
இதையடுத்து அங்கு வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணர்கள் மற்றும் ரெயில்வே போலீசார் உள்ளூர் போலீசார் மத்திய ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்) வெடிகுண்டு கண்காணிப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
ரயில் பயணிகளின் உடமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி பரிசோதிக்கப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் திரு.தீபக் எம் தாமோர் உத்தரவின் பேரில் ரயில் நிலையத்தில் 100க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர் .அவர்கள் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.