சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் இன்று 21.10.2021 முதல் 31.10.2021 வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இன்று 21.10.2021 காலை, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்திலுள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்கநாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் பணியின்போது இறந்த 377 காவல் ஆளிநர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., காவல் உயரதிகாரிகள்,
ஓய்வு பெற்ற காவல் உயரதிகாரிகள், அரசு அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், இறந்துபோன காவலர் குடும்பத்தினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டார்.
அதன்பேரில், இன்று (21.10.2021) முதல் 31.10.2021 வரையிலான 11 நாட்கள் சென்னை பெருநகரில் பல்வேறு இடங்களில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில், காவலர் வீர வணக்க நாள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்பேரில், வருகிற 11 நாட்களும், சென்னை பெருநகரில் உள்ள காவல் நிலைய வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில், காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, பணியின்போது உயிர் தியாகம் செய்த காவல் துறையினரின் புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்துதல்,
காவல்துறையினரின் பணிகள் மற்றும் வீரதீர செயல்கள் புரிந்து உயிர் தியாகம் செய்த காவல்துறையினர் குறித்த கண்காட்சியகங்கள், நாடகங்கள், காவல் வாத்திய குழுவினரின் இசை நிகழ்ச்சிகள், மினி மாரத்தான் போட்டிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள், ஓவிய போட்டிகள், எழுத்து போட்டிகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இன்று 21.10.2021 காலை, K-4 அண்ணா நகர் காவல் நிலைய வளாகத்தில், காவலர் வீர வணக்க நாள் கண்காட்சியகத்தை, சென்னை பெருநகர காவல், மேற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.S.ராஜேஸ்வரி, இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்தார்.
இக்கண்காட்சியகத்தில், பணியின்போது உயிர் தியாகம் செய்த காவல்துறையினர் மற்றும் கொரோனா பேரிடர் காலத்தில், பொதுமக்களின் உயிர் காக்கவும்,
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், முன்கள பணியாளர்ளாக பணி செய்து, உயிர் தியாகம் செய்த காவல் துறையினரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு, அவர்களுக்கு காவல் குழுவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், அண்ணாநகர் பகுதியிலுள்ள பள்ளி மாணவ, மாணவியர்களை இக்கண்காட்சியகத்திற்கு வரவழைத்து, காவல்துறையின் பணிகளும், நற்செயல்களும், உயிர் தியாகம் செய்த காவல்துறையினரின் வரலாறுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அண்ணா நகர் துணை ஆணையர் திருமதி.தீபா கணிக்கர், இ.கா.ப., அண்ணா நகர் சரக உதவி ஆணையர் திரு.அகஸ்டின் பால் சுதாகர், சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு.ரஜீஷ்பாபு, குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.ஜெயச்சந்திரன், மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி.சாந்திதேவி , காவல் ஆளிநர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல, R-1 மாம்பலம் காவல் நிலைய வளாகத்தில், காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, பணியின்போது இன்னுயிர் நீத்த காவல்துறையினரின் திருவுருவ புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியகத்தை மாம்பலம் சரக உதவி ஆணையாளர் திரு.K.பாரதிராஜா அவர்கள் திறந்து வைத்தார்.
இதில் பணியின்போது வீரமரணம் அடைந்த காவல் துறையினர் மற்றும் கொரோனா பேரிடர் காலத்தில் முன்கள பணியாற்றி உயிர் நீத்த முன்னாள் R-1 மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுரளி, உள்ளிட்ட உயிர் நீத்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களை கண்காட்சியகத்திற்கு வரவழைத்து, காவல்துறை குறித்தும், காவலர் வீர வணக்கநாள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், இன்று 21.10.2021 காலை சுமார் 11.00 மணியளவில், B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய வளாகத்தில், காவலர் வீர வணக்க நாள் முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், துறைமுகம் சரக உதவி ஆணையாளர் திரு.K.கொடிலிங்கம், சென்னை துறைமுகம், போக்குவரத்து மேலாளர் திரு.S.கிருபானந்தசாமி, ஶ்ரீகன்னிகா பரமேஸ்வரி கலை கல்லூரியின் பேராசிரியர்/ தமிழ்துறை தலைவர் திருமதி. டாக்டர் K.லட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, காவல்துறையின் பணிகள், சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.
மேலும், பணியின்போது உயிரிழந்த காவல் ஆய்வாளர் திரு.பெரியபாண்டியன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜகுமார், உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள், அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
S-5 பல்லாவரம் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை, தெற்கு மண்டல இணை ஆணையாளர் திரு.K.S.நரேந்திர நாயர், இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் முன்னதாக, பணியின்போது உயிர்தியாகம் செய்த காவல் அதிகாரிகள் மற்றும் கொரோனா பேரிடர் காலத்தில் பணி செய்து உயிர்தியாகம் செய்த முன்னாள் பல்லாவரம் சரக உதவி ஆணையாளர் திரு.ஈஸ்வரன் உள்பட வீரமரணம் அடைந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியும்,
மௌன அஞ்சலி செலுத்தியும், காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், புனித தோமையர் மலை துணை ஆணையாளர் திரு.அருண் பாலகோபாலன்,இ.கா.ப., பல்லாவரம் சரக உதவி ஆணையாளர், பல்லாவரம் காவல் நிலைய ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காவல்துறையினரின் அரும் பணிகளும், கொரோனா உள்பட இயற்கை பேரிடர் காலங்களிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் தன்னுயிரை தியாகம் செய்த காவல்துறையினர் குறித்தும், காவலர் வீர வணக்கநாள் குறித்தும் பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அறிந்திடவும் இன்று 21.10.2021 முதல் 11 நாட்கள் சென்னை பெருநகர காவல் துறை சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், நாளை 22.10.2021 மாலை சுமார் 05.30 மணியளவில், மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில், காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல்துறை, வாத்திய இசைக்குழுவினரின் (Police Band Team) இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இவ்விடத்தில், பணியின்போது வீரமரணமடைந்த காவல் துறையினர் மற்றும் கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களை பாதுகாக்கும் தலையாய பணியில் முன்கள பணியாற்றி தன்னுயிர் நீத்த காவல்துறையினரின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களும் உயிர் நீத்த காவல் துறையினரின் திருவுருவ படங்களுக்கு அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.