தூத்துக்குடி: பணியில் இருக்கும்போது தங்கள் இன்னுயிர் நீத்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு அவர்கள் செய்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்களின் வீரவணக்க உரை
வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அதற்கு முந்தைய வாரமான இந்த வாரத்தில் அவர்களை நினைவு கூறும் வகையில் காவல் துறை சார்பாக மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டும் வரும் திங்கட்கிழமை அக்டோபர் 21 ஆம் தேதி உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்படும் அவ்வாறு காவல்துறை உயிர்த்தியாகம் செய்த தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் பணியாற்றி உயிர்த்தியாகம் செய்து வீரமரணமடைந்த காவலர்கள் தெய்வத்திரு. பழனிதாஸ், மந்திரம்பிள்ளை, ராமச்சந்திரன் மற்றும் முருகன் ஆகியோர் செய்த தியாகத்தையும் கீழ்கண்டவாறு நினைவுகூர்ந்து அவர்களின் குடும்பத்தாரையும் இதன் மூலம் கௌரவிக்கப்படுகிறது.
1) தூத்துக்குடி மாவட்டத்தில் நாரைக்கிணறு புறக்காவல் நிலையமாக இருந்தபோது பணியாற்றிய காவலர் தெய்வத்திரு. பழனிதாஸ் அவர்கள் 04.05.1962 அன்று பார்ட்டி சகிதம் மதுவிலக்கு ரோந்து சென்ற போது சட்ட விரோத கும்பலால் கொலை செய்யப்பட்டு காவல் துறைக்காக தன்னுயிர் நீத்து வீரமரணம் அடைந்தார். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி, இவர் கிருஷ்ணகுமார் மற்றும் ஆவுடையம்மாள் தம்பதிகளின் புதல்வராவார் இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவியும் சுடலைமணி என்ற மகனும் பேச்சியம்மாள் என்ற மகளும் உள்ளனர்.
2) கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த காவலர் தெய்வத்திரு. மந்திரம் பிள்ளை அவர்கள் 31.12.1980 அன்று திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா திருவேங்கடம் காவல் நிலையத்தில் உள்ள குறிஞ்சாகுளத்தில் நடைபெற்ற விவசாய போராட்டத்தில் சட்ட விரோத கும்பலால் கொல்லப்பட்டு காவல்துறைக்கு தன்னுயிர் நீத்து வீரமரணம் அடைந்தார்.
இவரது சொந்த ஊர் முடிவைத்தானேந்தல் அஞ்சல் எம். புதூர் ஆகும். இவர் சண்முகசுந்தரம் பிள்ளை மற்றும் வள்ளியம்மாள் தம்பதிகளின் புதல்வராவார். இவருக்கு ஆவுடையாச்சியம்மாள் என்ற மனைவியும் வள்ளியம்மாள், உலகம்மாள், பெருமாள், ஈஸ்வரி முத்துலட்சுமி, பிரேமா என்ற மகள்களும் சண்முகசுந்தரம் என்ற மகனும் உள்ளனர்.
3) எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் தெய்வதிரு. ராமச்சந்திரன் அவர்கள் 13.06.1984 அன்று திருட்டு வழக்கு குற்றவாளிகளை கைது செய்ய சென்றபோது நான்கு பேர் கொண்ட அந்த கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். அவரது வீர தீர செயலை பாராட்டி அவருக்கு தமிழக முதல்வர் விருது வழங்கப்பட்டது. இவரது சொந்த ஊர் கோவில்பட்டி இவரது மனைவி வெள்ளம்மாள் மகன்கள் சிதம்பரம், சண்முகநாதன், செல்வநாயகம், ஐயாத்துரை மற்றும் சரவணகுமார் ஆகியோர் உள்ளனர்.
4) புதூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த முதல்நிலைக் காவலர் தெய்வதிரு. முருகன் அவர்கள் 16.11.2001 அன்று தேர்தல் முன்விரோதம் காரணமாக சல்லிச்செட்டிப்பட்டி மற்றும் சங்கரலிங்கபுரம் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 350 க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக கூடி ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். அந்தக் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சென்ற போது காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஷாஜகான் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அந்த சட்டவிரோத கும்பல் போலீசார் மீது கற்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காவலர் முருகன் கொல்லப்பட்டு காவல்துறைக்காக உயிர்த்தியாகம் செய்து வீரமரணம் அடைந்தார். அவருடன் சென்ற போலீசாரும் பலத்த காயமடைந்தனர்
வீரமரணமடைந்த முதல்நிலைக் காவலர் தெய்வதிரு. முருகன் அவர்கள் சொந்த ஊர் எட்டயபுரம் தாலுகா, கருப்பூராகும். இவர் சுப்பையா மற்றும் நாகம்மாள் தம்பதிகளின் புதல்வராவார். இவருக்கு ரமணிபாய் என்ற மனைவியும், பாலாஜி என்ற மகனும் உள்ளனர்.
மேற்படி உயிர் தியாகம் செய்த காவலர்கள் அனைவருக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. அவர்களது குடும்பத்தாரை கௌரவப்படுத்தும் வகையில் காவலர் வீரவணக்க நாளான 21.10.2019 வரும் திங்கட்கிழமை அன்று கௌரவிக்கப்படுகின்றனர்.