ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி திருநீலகண்டர் வீதியை சேர்ந்தவர் கோபால். இவருடைய மனைவி ருக்குமணி 55. கூலி தொழிலாளி. கடந்த 24-ந் தேதி இவரது வீட்டின் முன்பு தங்க சங்கிலி ஒன்று கிடந்தது. அதை எடுத்த ருக்குமணி அக்கம் பக்கத்தினர் யாராவது நகையை தொலைத்து உள்ளார்களா? என்று விசாரித்தார்.
ஆனால் யாரும் தொலைக்கவில்லை என்று தெரிந்தது. இதையடுத்து அவர் நேர்மையாக அந்த நகையை பவானி காவல் நிலையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயனிடம் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி பவானி செங்காடு பகுதியைச் சார்ந்த அன்புக்கனி என்பவரின் மனைவி கோகிலா என்ற பெண் தன்னுடைய 3½ பவுன் தங்க சங்கிலியை தொலைத்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை வரவழைத்து, ருக்குமணியின் கையாலேயே கோகிலாவிடம் தங்க செயினை ஒப்படைத்தார்கள். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ருக்குமணியை பாராட்டினார்.