செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, செப்.12: வண்டலூர் அருகே வீடு புகுந்து வாலிபரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிய 6 பேர் கொண்ட கஞ்சா கும்பலின் வெறிச்செயலால் கீரப்பாக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம், ஊமை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி(50). இவருக்கு மனைவி மாலா(46). மகன்கள் கண்ணன்(23). கார்த்திக்(21). ஆகியோர் உள்ளனர். இதில் கார்த்திக் கல்லூரிக்கு சரிவர செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கார்த்திக் தனது வீட்டில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கஞ்சா கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டில் புகுந்து கார்த்திகை இழுத்து போட்டு தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் திரண்டு ஓடி வந்தனர்.
இதனை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து பைக்குகளில் ஏறி தப்பித்தது. இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கார்த்திக்கை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கார்த்திக் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்த புகாரின் பேரில் காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நல்லம்பாக்கம் இருளர் பகுதியை சேர்ந்த 6 பேர் கொண்ட கஞ்சா கும்பலுடன் கார்த்திக்கு பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக வலம் வந்தனர். அப்போது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆகாசுக்கு பிறந்தநாள் விழா என்பதால் அதில் கார்த்திக் கலந்து கொள்ளவில்லை. இதனை அந்த கும்பல் கார்த்திக்கிடம் ஏன் பிறந்தநாள் விழாவுக்கு வரவில்லை என்று கேட்டுள்ளது.
அப்போது உங்களது பழக்கவழக்கம் எனக்கு பிடிக்கவில்லை. மீறி என்னை வற்புறுத்தினால் கஞ்சா விற்பதை போலீசில் போட்டு கொடுத்து விடுவேன் என்று கார்த்தி கூறிவிட்டு ஒதுங்கி உள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகியது. இதனை அடுத்து ஆறு பேர் கொண்ட கும்பல் கார்த்திகை தீர்த்து கட்ட திட்டம் தீட்டு உள்ளது. இதனை அடுத்து அவர்கள் போட்ட திட்டத்தின் படி கார்த்திகை நோட்டமிட்டு வீடு புகுந்து வெட்டி உள்ளனர் என்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக நல்லம்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த்(25). மணிகண்டன்(18). ஆகாஷ்(21). ஆகிய 3 பேரை நேற்று மாலை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர். மேலும் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள அப்பகுதியில் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் கீரப்பாக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்