கோவை : கோவை கணபதி சித்தா தோட்டம், ராஜ வீதியைச் சேர்ந்தவர் அன்னம்மாள் ( 45), இவர் வீட்டை பூட்டி விட்டு சிவானந்த புரத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் மாலையில் அன்னம்மாளின் வீட்டுக்குள் இருந்து ஒரு வாலிபர் வெளியே வந்தார். அவரை சந்தேகத்தின் பேரில் அந்தப் பகுதி மக்கள் பிடித்து விசாரித்தனர். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரனாக பதில் பேசினார். உடனே அந்த வாலிபரை பொதுமக்கள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் வெள்ளிப் பொருள்கள் பணம் இருந்துள்ளது. அவற்றை அவர் அன்னம்மாள் வீட்டில் இருந்து திருடி வந்துள்ளார். உடனடியாக அந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் சரவணம்பட்டி போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டு விசாரித்தனர். இதில் அவரது பெயர் சதீஷ்குமார் (35) என்பதும் சிவானந்தா காலனி, காந்தி நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கடந்த 2012 -ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரியவந்தது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்