தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்த செந்தில்முருகன் மனைவி முத்து கொண்டம்மாள் 34. என்பவர் கடந்த 16.08.2024 அன்று குடும்பத்துடன் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு அடுத்த நாள் வந்து பார்த்தபோது அவரது வீட்டில் பீரோவில் இருந்த 9 சவரன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து முத்து கொண்டம்மாள் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி, விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. பொன்னரசு மேற்பார்வையில் ஆய்வாளர் திருமதி. உமாதேவி தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நாராயணசாமி, முதல் நிலை காவலர் திரு. சரவணகுமார் மற்றும் காவலர் திரு. பாலமுருகன் ஆகியோர் அடங்கிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ராமநாதபுரம் மாவட்டம் இரட்டையூரணி பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் உமாபதி 31. என்பவர் மேற்படி முத்து கொண்டம்மாள் என்பவரது வீட்டில் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி போலீசார் குற்றவாளியான உமாபதியை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 2,55,000/- மதிப்புள்ள 9 சவரன் தங்க நகைகளையும் மீட்டனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார்.