தூத்துக்குடி: தூத்துக்குடி வானியன்விளை பகுதியைச் சேர்ந்த முத்துவீரன் மகன் காந்தி 64. என்பவர் கடந்த 20.07.2024 அன்று பக்கத்து தெருவில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு சென்று தங்கி விட்டு மறுநாள் (21.07.2024) காலையில் வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 50 சவரன் நகை, கைக்கடிகாரம் மற்றும் ரூபாய் 55,000/- பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து மேற்படி காந்தி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. ஆதாம் அலி தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் திரு. மாரிமுத்து, திரு சிவக்குமார் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சாமுவேல், காவலர் திரு. முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திரு. திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளியை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் ஏ.சண்முகபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் சேர்மப்பாண்டி 32. என்பவர் மேற்படி காந்தியின் வீட்டிற்கு புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் உடனடியாக மேற்படி குற்றவாளி சேர்மபாண்டியை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட 45 சவரன் தங்க நகைகள், கை கடிகாரம் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி வீடு புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிய குற்றவாளியை கைது செய்து, தங்க நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.