விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகிலூள்ள எஸ்.எஸ்.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவருடைய மனைவி பாஞ்சாலி (70), இவர்களுடைய மகன் விஜயகுமார்(42), டிராக்டர் ஓட்டுனராக உள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தாய் பாஞ்சாலியிடம் சண்டையிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் மாலை மது போதையில் வீட்டிற்கு வந்த விஜயகுமார் மது குடிப்பதற்கு தாய் பாஞ்சாலியிடம் பணம் கேட்டுள்ளார்.
தாய் பணம் தர மறுத்துள்ளார். இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. விஜயகுமார் அருகில் இருந்த கட்டையால் தாய் பாஞ்சாலியை தாக்கியதுடன் அருகில் இருந்த கல்லை தலையில் போட்டு கொலை செய்துள்ளார். அதில் தலை நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் பாஞ்சாலி துடிதுடித்து உயிரிழந்தார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் விக்கிரவாண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததுடன் அங்கிருந்து தப்பிக்க முயன்ற விஜயகுமாரை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொலை செய்யபட்ட பாஞ்சாலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.