வேலூர் : வேலூர் மாவட்டத்தில், விரைவுப்படை காவல் துறையினர், 40-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சரக டி.ஐ.ஜி. ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்தப்படை உள்ளது. கலவரம் போன்ற நேரங்களில் விரைவுப்படை காவல் துறையினர், மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். அவ்வாறு ஈடுபடும் காவல் துறையினரின் பாதுகாப்பும் முக்கியமானதாகும். எனவே அவர்களுக்கான பாதுகாப்பு கவசஉடை, தோட்டா துளைக்காக ஹெல்மெட், பைபர் லத்தி, டார்ச் லைட், கயிறு, பைனாகுலர், பாதுகாப்பு தடுப்பு உள்ளிட்டவைகள் அத்தியாவசியமானதாகும். வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் விரைவுபடை காவல் துறையினர், 15 பேருக்கு முதல்கட்டமாக இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கூடுதலாக 30 பேருக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி இதுதவிர மாவட்டத்தில் பணியாற்றும் காவல் துறையினர், பலர் மூங்கிலான லத்திகள் வைத்துள்ளனர். அதை மாற்றி சுமார் 700 பேருக்கு பைபர் லத்திகள், ஹெல்மெட்டுகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்படுகிறது. எனவே இதன் தேவைகள் குறித்து தலைமையிடத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வந்தபின்னர் அனைவருக்கும் வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள ஆயுதங்கள், கண்ணீர் புகை குண்டுகளின் இருப்பு குறித்தும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தேவைகளுக்கு ஏற்ப ஆயுதங்கள் வரவழைக்கப்படும். கலவரங்களை கட்டுப்படுத்துவது குறித்து காவல் துறையினருக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மழைக்காலம் முடிந்தவுடன் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என காவல் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.