விழுப்புரம் : தமிழகத்திலேயே மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் அதிகம் நிறைந்த மாவட்டம் விழுப்புரம் மாவட்டம். இதனாலேயே விழுப்புரம் மாவட்டத்தில், அடிக்கடி சாலை விபத்துகள் நடந்து வருகிறது. சில சமயங்களில் நடக்கும் விபத்துகளில் கொத்து, கொத்தாகவும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த சாலை விபத்துகளை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறபோதிலும் நாள்தோறும் மாவட்டத்தின் ஏதாவது ஒரு சில இடங்களில் சாலை விபத்துகள் ஏற்பட்டு இன்றளவும் விபத்துக்கு பெயர்போன மாவட்டமாக விழுப்புரம் இருந்து வருகிறது. சிறப்புக்குழுவினர் இந்நிலையில் மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில், அதிகளவில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்பதை கண்டறிந்து அந்த இடங்களில் விபத்தை தடுக்கும் வகையில் சாலை அளவீடு செய்யும் பணியை நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்காக ஒரு சிறப்பு குழுவையும் மாவட்ட காவல்துறை அமைத்துள்ளது.
இந்த குழுவில் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், 108 ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்கள், பொறியியல் படிப்பு முடித்த மாணவர்கள், நெடுஞ்சாலைத்துறையினர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சாலை அளவீடு இக்குழுவினர் விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் சாலை அளவீடு செய்யும் பணியை இன்று முதல் தொடங்கியுள்ளனர். இப்பணி வருகிற 8-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. நேற்று மாவட்ட காவல் சூப்பிரண்டு திரு . ஸ்ரீநாதா, அறிவுரைப்படி திண்டிவனம் உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு திரு .அபிஷேக்குப்தா தலைமையில் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அக்குழுவினர் ஆய்வு செய்தனர். அதுபோல் ஒலக்கூர் அருகே மேல்பேட்டை, கூட்டேரிப்பட்டு ரோடு, திண்டிவனம் காலேஜ் ரோடு ஜங்ஷன் ஆகிய இடங்களிலும் தீவிர ஆய்வுப்பணி மேற்கொண்டனர். இவர்கள் விபத்துகளை தடுக்கும்பொருட்டும், சாலைகளின் அளவீடுகள் குறித்தும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.