திருநெல்வேலி: வருகின்ற 10.9.2021ம் நாள் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற இருப்பதால் கொரோனா தற்காப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை இன்று அனைத்து இந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர்களுடன் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் வைத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள், விளக்கி கூறியுள்ளார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில் தற்போது கொரோனா நோய்த்தொற்று சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது எனவும்,இதனால் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவது வழிபடுவது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை எடுத்துரைத்துள்ளார்.
10.09.2021 அன்று விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு எந்த ஒரு ஊர்வலம் நடத்தவும், நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
10.09.2021 விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை தனிப்பட்டமுறையில் அவரவர்கள் தங்களது வீட்டிற்குள் நடத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
மேலும் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்படியும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் படி கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வள்ளியூர் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.சமய் சிங் மீனா இ.கா.ப, திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெபராஜ், நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பாலகிருஷ்ணன், அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரான்சிஸ், சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன், ஆகியோரும் தாழையூத்து, அம்பாசமுத்திரம், வி.கே.புரம், வள்ளியூர், நாங்குநேரி சேரன்மகாதேவி மற்றும் களக்காடு போன்ற இடங்களைச் சேர்ந்த அனைத்து இந்து அமைப்பை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.