திருவாரூர்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை (07.09.2024) கொண்டாடவிருக்கும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் அமைக்கப்படும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று (06.09.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணி தொடர்பான அறிவுறைகள் அனைத்து காவல் அலுவலர்களும் விநாயகர் சிலை அமைப்பதற்கு உரிய அனுமதி பெற்றுள்ளனரா என்றும், சிலை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் போதிய அளவில் வெளிச்சம் உள்ளதா என உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும், விநாயகர் சிலை ஊர்வலமாக செல்லக்கூடிய வழிகளை அறிந்து வைத்திருக்க வேண்டும்,விநாயகர் சிலை வைக்கப்பட்டது முதல் காவல் அலுவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும், பள்ளி மற்றும் மருத்துவமனை போன்ற இடங்களில் ஒலி பெருக்கி பயன்படுத்த அனுமதிக்க கூடாது, பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் விநாயகர் சிலை அமைக்க அறிவுறுத்த வேண்டும்,
பாதுகாப்பான முறையில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை சம்மந்தப்பட்ட சிலை பொறுப்பாளர்கள் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும். சிலை வைக்கப்பட்டுள்ள இடங்கள், ஊர்வலம் செல்லக்கூடிய பகுதியில் உள்ள ஊர் முக்கியஸ்தர்களை அறிந்து அவர்களுடன் கலந்து பேசி எவ்வித விரும்பத்தகாத நிகழ்வுகள் இன்றி சிலைகளை கரைக்க உரிய ஏற்பாடுகளை செய்ய அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலந்தாய்வு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) திரு.V.அருள்செல்வன், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பளர்கள், அனைத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் அமைக்கப்படும் இடங்களில் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டார்கள்.