சென்னை : சென்னையில் உள்ள 426 விடுதிகள், தங்கும் விடுதிகளில் (மேன்சன்) காவல்துறையினர் , நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா? என்பதை ஆராய்ந்தனர். ஒரு சில விடுதிகளில் உரிய அடையாள சான்று அளிக்காமல் சிலர் தங்கி இருந்தனர். இதையடுத்து உரிய அடையாள சான்று அளிக்காத நபர்களுக்கு அறைகள் வழங்கக்கூடாது என்று விடுதி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு காவல்துறையினர், அறிவுறுத்தினர்.
இதே போன்று சென்னையின் முக்கிய இடங்கள், சந்திப்புகளில் நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் , சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்களில் சென்ற 4 ஆயிரத்து 951 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த சோதனையில் மது போதையில் வாகனம் ஓட்டியவர்களின் வாகனங்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓட்டி வரப்பட்ட வாகனங்கள் என 92 வாகனங்களை காவல்துறையினர், பறிமுதல் செய்தனர். குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை அடையாளம் காட்டும் கருவி மூலம் 2,547 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.