மதுரை : திருப்பரங்குன்றம் கோயியில் கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்றது வைகாசி விசாகத் திருவிழா. ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இவ்விழாவினை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து புஷ்ப அங்கி அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு அலங்கரித்து வைக்கப் பட்டிருக்கும் மண்டபத்தை மூன்று முறை சுற்றிவந்து சுவாமி மண்டபத்தின் மையப்பகுதியில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளனார். அங்கு சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
இதேபோல வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி வரை சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் இரவு 7 மணியளவில் புஷ்ப அங்கி அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாக திருவிழா ஜூன் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் சண்முகர் சன்னதியில் இருந்து புறப்பாடாகி கோயில் கம்பத்தடி மண்டபத்தின் அருகே உள்ள விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு அதிகாலை 4.30 மணி முதல் பக்தர்கள் பால்குடம் நேற்றிக்கடனாக எடுத்துவரும் பால் கொண்டு மாலை வரை சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பாலாபிஷேகம் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜூன் 3 ஆம் தேதி மொட்டையரசுத்திருவிழா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி