உத்திர பிரதேஷ் : உத்தரபிரதேச மாநிலத்தில் 8 காவல்துறையினரை சுட்டு கொலை செய்துவிட்டு தப்பித்த முக்கிய ரவுடி விகாஸ் துபேவை தமிழகத்தைச் சேர்ந்த திரு. தினேஷ் குமார்., IPS அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவன் தப்பிக்க முயன்ற போது சுட்டு கொல்லப்பட்டான்.
ஜூலை 2ஆம் தேதி கான்பூரில் தன்னை பிடிக்க வந்த காவல்துறையினரை தாதா விகாஷ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் துப்பாக்கியால் சுட்டத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகளை உத்தரப்பிரதேச மாநில போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த வழக்கில் தாதா விகாஷ் துபேவின் கூட்டாளிகள் 4 பேரை வெவ்வேறு இடங்களில் வைத்து போலீஸ் என்கவுண்டர் செய்தனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பதுங்கி இருந்த தாதா விகாஷ் துபேவை நேற்று போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணைக்காக அவன், உத்தரப்பிரதேச மாநில சிறப்பு அதிரடிப் படையிடம் ஒப்படைக்கப்பட்டான். இதை அடுத்து மத்தியப்பிரதேசத்தில் இருந்து கான்பூருக்கு அவன் காரில் அழைத்துச் செல்லப்பட்டான்.
கான்பூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் சச்செண்டி எல்லை அருகே கார் சென்ற போது, மழை காரணமாக கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, காயமடைந்த போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டு விகாஸ் துபே தப்ப முயற்சித்ததாகச் சொல்லப்படுகிறது. சரண் அடையுமாறு போலீசார் கூறிய போது, விகாஸ் துபே, துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை அடுத்து போலீசார் நடத்திய பதில் துப்பாக்கிச்சூட்டில் விகாஸ் துபே காயம் அடைந்ததாகவும், பின்னர் கான்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், குண்டடி பட்ட விகாஸ் துபே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.