வேலூர் : வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கலர்பாளையம் பகுதியில் ஒரு வாழைத்தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.ராஜேஷ் கண்ணன், உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.ராமமூர்த்தி, மற்றும் அதிரடிப் படையினருடன் நேற்று மாலையில் கொட்டும் மழையில் எர்த்தாங்கல் கலர்பாளையம் பகுதிக்கு வந்தார். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பெரும்பாடி ஏரிக்கரையின் மீது சென்று அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் சேறும் சகதியுமான ஒத்தையடி பாதையில், சென்று ஆய்வு செய்தபோது கஞ்சன் என்கிற முனியப்பன் என்பவருடைய வாழைத்தோட்டத்தில் 1½ அடி முதல் 4 அடி உயரம்வரை 40 கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
40 கஞ்சா செடிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது, தகவல் தெரிவிக்க வேண்டும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்கும் பொருட்டு காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் இயங்கும் வாட்ஸ் அப் எண் 9092700100 அறிமுகம் செய்தோம். அதன்படி வேலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் குறித்து ஏராளமான ரகசிய தகவல்கள் வரப்பட்டன. அந்த தகவல்களின் பேரில் தனிப்படையினர் தீவிரமாக சோதனை செய்து போதை பொருட்களை கடத்துபவர்கள், விற்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனனர். வாட்ஸ் அப் எண்ணின் பலனாக கஞ்சா பயிரிடப்பட்டு இருப்பது தெரியவந்தது. வாழைத் தோட்டத்தில் 40 கஞ்சா செடிகள் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நிலத்தின் உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது போல் பொதுமக்கள் தங்கள் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.