வேலூர் : ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் திருமலை 27. அணைக்கட்டு அருகே உள்ள ஓங்கப்பாடியை சேர்ந்தவர் சந்தானம் 28. இருவரும் கோவையில் உள்ள நூற்பாலை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தனர்.
இருவரும் அணைக்கட்டு-ஒடுகத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது காரில் 8 பேர் கும்பல் வந்தனர். அவர்கள் திடீரென திருமலையை காரில் தூக்கி போட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தானம் அலறி கூச்சலிட்டார். அதற்குள் கார் வேலூர் நோக்கி சென்று விட்டது.. இதனை தொடர்ந்து திருமலையின் செல்போனில் இருந்த அவரது நண்பர் கார்த்திக் என்பவரிடம் அந்த கும்பல் தொடர்பு கொண்டனர்.
அப்போது ரூ.1 லட்சம் பணம் தந்தால்தான் திருமலையை விடுவோம் என மிரட்டல் விடுத்தனர்
இதற்கிடையே சந்தானம் மற்றும் கார்த்திக் இருவரும் திருமலை கடத்தப்பட்டது குறித்து வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். மேலும் கும்பல் பணம் கேட்டு செல்போனில் மிரட்டல் விடுத்தது குறித்து தகவல் தெரிவித்தனர்.
அப்போது போனில் பேசிய கும்பல் வேலூர் அடுத்த மேல்மொணவூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே பணத்துடன் வரும்படி கூறினர்.
இதனை தொடர்ந்து சந்தானம் மற்றும் தனிப்படை போலீசார் மேல்மொணவூருக்கு வந்தனர்.
சந்தானம் தனியாக சென்று கும்பலிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் வெளியில் வந்தனர். போலீசாரை கண்டதும் கடத்தல் கும்பல் திருமலையை அங்கேயே விட்டுவிட்டு பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர்.
திருமலையை மீட்ட போலீசார் அவரை எங்கு அடைத்து வைத்திருந்தனர் என்பது குறித்து விசாரித்தனர்.
மேலும் இதுதொடர்பாக காட்பாடியை சேர்ந்த சதிஷ், பிரவின், சீனிவாசன், ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.