மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு முதல் வாடிப்பட்டி வரை உள்ள பிரதான சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இதனால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்த நிலையில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை துறை சார்பில் ஏற்கனவே உள்ள சாலையில் மராமத்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு குண்டும், குழியுமாக உள்ள பள்ளங்களில் பேஜ் ஒர்க் என்ற பெயரில்ஜல்லி கற்களை கொட்டி மேவி விட்டு செல்கின்றனர். தார் ஊற்றாமல் ஜல்லி கற்களை மட்டும் கொட்டி விட்டு சென்றதால் , கற்கள் முழுதும் பெயர்ந்து சாலை முழுவதும் கற்களாகவே உள்ளது. இதனால், அந்தப் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர். இதனால் , இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் பழுதாகி வருவதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். மேலும், மராமத்து பணி என்ற பெயரில் நடக்கும் பகல் கொள்ளையை கண்டும் காணாமல் இருக்கும் நெடுஞ்சாலைத்துறையினரின் செயலால் வேதனையடைந்து வருகின்றனர். ஆகையால், மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, முறையாக மராமத்து பணியில் ஈடுபட்டு தார் சாலையை செப்பனிட வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்