விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வீரசோழன் அருகே கமுதி – திருச்சுழி சாலை அபிராமம் சந்திப்பில் வீரசோழன் காவல்நிலைய போலீசார், சார்பு ஆய்வாளர் முத்துப்பாண்டி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திருச்சுழி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், போலீசார் சோதனை செய்வதைப் பார்த்து அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கிபிடித்து சோதனை செய்தனர்
. அவர்களிடம் உலோகத்திலான சிறிய அம்மன் சிலை இருந்ததால், இருவரையும் சந்தேகத்தின் பேரில் நரிக்குடி காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். போலீசார் விசாரணையில் பிடிபட்ட இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் பழனிசாமி, கூறிப்பாண்டி என்று தெரியவந்தது. பிடிபட்ட இருவரிடமும் போலீசார் விசாரித்த போது,
தங்களிடம் இருப்பது போல இன்னும் மூன்று சிலைகள், மினாக்குளம் பகுதியில் உள்ள பூசாரி சின்னையா என்பவரிடம் இருப்பதாக கூறினர். அவர்கள் கூறிய தகவலின் பேரில் நரிக்குடி போலீசார் பூசாரி சின்னையா வீட்டில், அதிரடி சோதனை செய்தனர். சின்னையா வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை, விநாயகர் சிலை மற்றும் பெரிய அம்மன் சிலை என மேலும் மூன்று சிலைகளை போலீசார் மீட்டனர்.
கைப்பற்றப்பட்ட 4 சிலைகளும் ஐம்பொன் சிலைகள் என்று தெரிகிறது. வீட்டில் சிலைகள் வைத்திருந்த பூசாரி சின்னையா, அவரது உறவினர் பழனிமுருகன் இருவரையும் நரிக்குடி போலீசார் கைது செய்து, காவல் நிலையம் கொண்டு சென்றனர். பிடிபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்
. இவர்களுக்கு எப்படி 4 ஐம்பொன் சிலைகள் கிடைத்தது, கோவில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளா, சிலைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, இந்த சிலைகளுக்கும் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது, சிலைகளை எங்கு விற்க முயன்றனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.