திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும். பொங்கல் பண்டிகை விடுமுறையின் இறுதி நாளான இன்று பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் சொந்த வாகனங்களில் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். பொங்கல் விடுமுறை இறுதி தினம் என்பதால் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் வருகையால் பெரியபாளையம் சுற்றுப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மட்டுமின்றி அவ்வழியே வாகனங்களில் சென்ற பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பொதுமக்கள் வாகனங்கள் மட்டுமின்றி நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன. பெரியபாளையம் பகுதியில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் முக்கிய நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து பெரியபாளையம் வழியே திருப்பதி செல்லும் வாகனங்கள் ஊருக்குள் வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உடனடியாக பெரியபாளையத்தில் புறவழிச் சாலை திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது. மேலும் பெரியபாளையம் பகுதியில் போதிய போலீஸ் இல்லாமல் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு