சென்னை: சென்னை, காசிமேடு பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 5 குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாபுராஜ், வ/23 மற்றும் அவரது நண்பர் பவன்சங்கர் ஆகியோர் கடந்த 04.9.2019 அன்று காசிமேடு, அத்திப்பட்டு பள்ளம் என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் பாபுராஜ் மற்றும் பவன்சங்கரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி 2 சவரன் தங்கச்சங்கிலி, ½ சவரன் மோதிரம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
பின்னர் பாபுராஜ் மற்றும் பவன்சங்கர் இது குறித்து N-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குற்றவாளிகளான அப்பகுதியைச் சேர்ந்த 1.சூர்யா வ/19, 2.மதன் வ/23, 3.மதன்குமார் வ/24, 4.சுரேந்தர் வ/20, 5. 17 வயது இளஞ்சிறார் ஆகிய 5 பேரை மறுநாள் (05.9.2019) அதிகாலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 2 சவரன் தங்கச்சங்கிலி, ½ சவரன் மோதிரம், செல்போன்கள் -2 மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய கத்திகள்-2 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு.G.செல்வகுமார், திரு.S.சுப்ரமணி, தலைமைக் காவலர் S.சதிஷ்குமார் (த.கா.26583) மற்றும் முதல்நிலைக் காவலர் A.செந்தில்குமார் (மு.நி.கா.29356) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் (20.9.2019)அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.