திருவள்ளூர்: பாஜக அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்திய சட்டங்களின் பெயர்களான இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சி சட்டம் ஆகிய சட்டங்களின் பெயரை ஹிந்தியில் மாற்றி மசோதாவை நிறைவேற்றியது. இந்தியன் பீனல் கோட் 1860 ம் ஆண்டு IPC என்பதை பாரதிய நியாய சன்ஹிதா 2023 (Bharathiya Nyaya Sanhita 2023) என்றும், கிரிமினல் புரொசிஜர் கோட் 1973 என்பதை பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா 2023 (Bharatiya Nagarik suraksha Sanhita 2023) எனவும், இந்தியன் எவிடன்ஸ் ஆக்ட் 1872 என்பதை பாரதிய சாக்ஷயா அதிநயம் 2023 (Bharatiya Sakshaya Adhinayam 2023) எனவும் இந்தியில் பெயர் மாற்றம் செய்துள்ளது. இந்த சட்டங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும், வழக்கறிஞர் சங்கங்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள வழக்கறிஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக சார்பு நீதிமன்ற வாயிலில் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு துறைகளில் ஹிந்தி திணிப்பில் ஈடுபட்டு வரும் மத்திய அரசு நீதித்துறையிலும் தலையிட்டு ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு